ஒருவனாய் உலகேத்த பாடல் வரிகள் (oruvanay ulaketta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்ஒருவனாய் உலகேத்த

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவ மான நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 1

மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ
வானவரை வலியமுத மூட்டி யந்நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ
நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ
அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ
சிலையால்முப் புரமெரித்த முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 2

பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்
நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்வாங்கி யெய்த நாளோ
விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 3

ஓங்கி யுயர்ந்தெழுந்து நின்ற நாளோ
ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ
தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்த நாளோ
நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு
நில்லாயெம் பெருமானே யென்றங் கேத்தி
வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ
வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே. 4

பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே
நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே
நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்
சீலமே சிவலோக நெறியே யாகுஞ்
சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ
குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே. 5

திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ
மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து
மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ
பிறங்கியசீர்ப் பிரமன்றன் தலைகை யேந்திப்
பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ
அறம்பலவு முரைப்பதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 6

நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ
நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்
கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ
காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று
வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ
வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ
தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 7

பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்
பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ
பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்
பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ
விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 8

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டுங்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டுந்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 9

ஈசனா யுலகேழும் மலையு மாகி
இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ
வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ
மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ
தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ
சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ
தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment