நீறேறு திருமேனி யுடையான் பாடல் வரிகள் (nireru tirumeni yutaiyan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமழபாடி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருமழபாடிநீறேறு திருமேனி யுடையான்

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 1

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 2

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 3

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 4

உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேத மாறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னும் மணாளன் றானே. 5

தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 6

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 7

பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 8

ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 9

ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்
ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை
ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment