நிறைக்க வாலியள் பாடல் வரிகள் (niraikka valiyal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாவடுதுறை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாவடுதுறை
சுவாமி : கோமுக்தீசுவரர்
அம்பாள் : ஒப்பிலா முலையாள்

நிறைக்க வாலியள்

நிறைக்க வாலியள்
அல்லளிந் நேரிழை
மறைக்க வாலியள்
அல்லளிம் மாதராள்
பிறைக்க வாலப்
பெரும்புனல் ஆவடு
துறைக்க வாலியோ
டாடிய சுண்ணமே. 1

தவள மாமதிச்
சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய
பிஞ்ஞகன் எம்மிறை
அளவு கண்டிலள்
ஆவடு தண்டுறைக்
களவு கண்டனள்
ஒத்தனள் கன்னியே. 2

பாதி பெண்ணொரு
பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங்
கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு
தண்டுறை மேவிய
சோதி யேசுட
ரேயென்று சொல்லுமே. 3

கார்க்கொள் மாமுகில்
போல்வதோர் கண்டத்தன்
வார்க்கொள் மென்முலை
சேர்ந்திறு மாந்திவள்
ஆர்க்கொள் கொன்றையன்
ஆவடு தண்டுறைத்
தார்க்கு நின்றிவள்
தாழுமா காண்மினே. 4

கருகு கண்டத்தன்
காய்கதிர்ச் சோதியன்
பருகு பாலமு
தேயென்னும் பண்பினன்
அருகு சென்றிலள்
ஆவடு தண்டுறை
ஒருவன் என்னை
யுடையகோ வென்னுமே. 5

குழலுங் கொன்றையுங்
கூவிள மத்தமுந்
தழலுந் தையலோர்
பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு
தண்டுறை யாவெனக்
கழலுங் கைவளை
காரிகை யாளுக்கே. 6

பஞ்சின் மெல்லடிப்
பாவையோர் பங்கனைத்
தஞ்ச மென்றிறு
மாந்திவ ளாரையும்
அஞ்சு வாளல்லள்
ஆவடு தண்டுறை
மஞ்ச னோடிவள்
ஆடிய மையலே. 7

பிறையுஞ் சூடிநற்
பெண்ணோடா ணாகிய
நிறையு நெஞ்சமும்
நீர்மையுங் கொண்டவன்
அறையும் பூம்பொழில்
ஆவடு தண்டுறை
இறைவன் என்னை
யுடையவன் என்னுமே. 8

வையந் தானளந்
தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற்
றார்க்கழ லாயினான்
ஐயன் ஆவடு
தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை
யுங்கழல் கின்றதே. 9

பக்கம் பூதங்கள்
பாடப் பலிகொள்வான்
மிக்க வாளரக்
கன்வலி வீட்டினான்
அக்க ணிந்தவன்
ஆவடு தண்டுறை
நக்கன் என்னுமிந்
நாணிலி காண்மினே.

சோழ நாட்டுத் தலம்

திருச்சிற்றம்பலம்

Leave a Comment