நிணம்படு சுடலையின் பாடல் வரிகள் (ninampatu cutalaiyin) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கொள்ளிக்காடு தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கொள்ளிக்காடு
சுவாமி : அக்கினீசுவரர்
அம்பாள் : பஞ்சினுமெல்லடியம்மை

நிணம்படு சுடலையின்

நிணம்படு சுடலையின்
நீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ
டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில்
உண்ப ராயினுங்
குணம்பெரி துடையர்நங்
கொள்ளிக் காடரே. 1

ஆற்றநல் அடியிணை
அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன்
தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன்
அடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர்
கொள்ளிக் காடரே. 2

அத்தகு வானவர்க்
காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை
கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும்
மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர்
கொள்ளிக் காடரே. 3

பாவணம் மேவுசொன்
மாலை யிற்பல
நாவணங் கொள்கையின்
நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை
யாள்வ ராயினுங்
கோவணங் கொள்கையர்
கொள்ளிக் காடரே. 4

வாரணி வனமுலை
மங்கை யாளொடுஞ்
சீரணி திருவுருத்
திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால்
நணுக லார்எயில்
கூரெரி கொளுவினர்
கொள்ளிக் காடரே. 5

பஞ்சுதோய் மெல்லடிப்
பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள்
மகிழ்வர் நாடொறும்
வெஞ்சின மருப்பொடு
விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர்
கொள்ளிக் காடரே. 6

இறையுறு வரிவளை
இசைகள் பாடிட
அறையுறு கழலடி
ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல்
சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர்
கொள்ளிக் காடரே. 7

எடுத்தனன் கயிலையை
இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிர
லால்அ லறிடப்
படுத்தன ரென்றவன்
பாடல் பாடலுங்
கொடுத்தனர் கொற்றவாள்
கொள்ளிக் காடரே. 8

தேடினா ரயன்முடி
மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று
நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு
பத்தர் சித்தமுங்
கூடினார்க் கருள்செய்வர்
கொள்ளிக் காடரே. 9

நாடிநின் றறிவில்நா
ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் ஓதிய
வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை
பயின்ற மாதொடுங்
கூடுவர் திருவுருக்
கொள்ளிக் காடரே. 10

நற்றவர் காழியுள்
ஞான சம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க்
கொள்ளிக் காடரைச்
சொற்றமிழ் இன்னிசை
மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி
காண வல்லரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment