நீள நினைந்தடி யேனுமை பாடல் வரிகள் (nila ninaintati yenumai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோளிலி – திருக்குவளை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கோளிலி – திருக்குவளைநீள நினைந்தடி யேனுமை

நீள நினைந்தடி யேனுமை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
அட்டித் தரப்பணியே. 1

வண்டம ருங்குழ லாளுமை
நங்கையோர் பங்குடையாய்
விண்டவர் தம்புர மூன்றெரி
செய்தவெம் வேதியனே
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை
அட்டித் தரப்பணியே. 2

பாதியோர் பெண்ணைவைத் தாய்பட
ருஞ்சடைக் கங்கைவைத்தாய்
மாதர்நல் லார்வருத் தம்மது
நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடை சூழ்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புத னேயவை
அட்டித் தரப்பணியே. 3

சொல்லுவ தென்னுனை நான்தொண்டை
வாயுமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு
பூசல்செய் தாருளரோ
கொல்லை வளம்புற விற்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அல்லல் களைந்தடி யேற்கவை
அட்டித் தரப்பணியே. 4

முல்லை முறுவல் உமையொரு
பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலை யிற்பலி
கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புற விற்றிருக்
கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடி யேற்கவை
அட்டித் தரப்பணியே. 5

குரவம ருங்குழ லாளுமை
நங்கையோர் பங்குடையாய்
பரவை பசிவருத் தம்மது
நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில் சூழ்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அரவ மசைத்தவ னேயவை
அட்டித் தரப்பணியே. 6

எம்பெரு மானுனை யேநினைந்
தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழ லாளொரு
பாகம மர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ்திருக்
கோளிலி எம்பெருமான்
அன்பது வாயடி யேற்கவை
அட்டித் தரப்பணியே. 7

அரக்கன் முடிகரங் கள்அடர்த்
திட்டவெம் மாதிபிரான்
பரக்கும் அரவல்கு லாள்பர
வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதி கொள்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
இரக்கம தாயடி யேற்கவை
அட்டித் தரப்பணியே. 8

பண்டைய மால்பிர மன்பறந்
தும்மிடந் தும்மயர்ந்துங்
கண்டில ராயவர் கள்கழல்
காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை
அட்டித் தரப்பணியே. 9

கொல்லை வளம்புற விற்றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பர வுந்திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துல கின்அண்டர்
வானுல காள்பவரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment