நடைமரு திரிபுரம் பாடல் வரிகள் (nataimaru tiripuram) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்
சுவாமி : மகாலிங்கேசுவரர்
அம்பாள் : பெருநலமுலையம்மை

நடைமரு திரிபுரம்

நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே. 1

மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடமிடை மருதே. 2

அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையும் உடையணல் இடமிடை மருதே. 3

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடமிடை மருதே. 4

வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே. 5

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடமிடை மருதே. 6

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே. 7

மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடமிடை மருதே. 8

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே. 9

துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே. 10

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment