நன்றுடையானைத் பாடல் வரிகள் (nanrutaiyanait) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சிராப்பள்ளி – திருச்சி(மலைகோட்டை கோவில்) தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சிராப்பள்ளி – திருச்சி(மலைகோட்டை கோவில்)
சுவாமி : மாத்ருபூதேஸ்வரர்
அம்பாள் : மட்டுவார்குழலி
நன்றுடையானைத்
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே. 1
கைம்மகஏந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே. 2
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 3
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவன்எங்கள் பெருமானே. 4
கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 5
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 6
வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 7
மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 8
அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டால் இகழாரே. 9
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 10
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.
திருச்சிற்றம்பலம்