நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் பாடல் வரிகள் (nampinarkkarul ceyyumantanar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலைநம்பினார்க்கருள் செய்யுமந்தணர்

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
நான்மறைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மட வாரணி
பெற்ற திருமிழலை
உம்ப ரார்தொழு தேத்த மாமலை
யாளடும் முடனே உறைவிடம்
அம்பொன் வீழிகொண் டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 1

விடங்கொள் மாமிடற் றீர்வெள்ளைச் சுருள்ஒன்
றிட்டுவிட்ட காதினீர் என்று
திடங்கொள் சிந்தையி னார்கலி
காக்குந் திருமிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
வந்திழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழி கொண் டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 2

ஊனை உற்றுயிர் ஆயினீர் ஒளிமூன்று
மாய்த்தெளி நீரோ டானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர்செழு
மாடத் திருமிழலை
மானை மேவிய கையினீர்மழுஏந்தினீர்
மங்கை பாகத் தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 3

பந்தம் வீடிவை பண்ணினீர் படிறீர்
மதிப்பிதிர்க் கண்ணி யீரென்று
சிந்தைசெய் திருக்குஞ்செங்கை
யாளர் திருமிழலை
வந்துநாடகம் வான நாடியர்
ஆட மாலயன் ஏத்த நாடொறும்
அந்தண் வீழிகொண்டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 4

புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
திரிசெய் நான்மறை யோர்சிறந்
தேத்துந் திருமிழலைப்
பரிசி னாலடி போற்றும் பத்தர்கள்
பாடி ஆடப் பரிந்து நல்கினீர்
அரிய வீழிகொண் டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 5

எறிந்தசண்டி இடந்த கண்ணப்பன்
ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்
செறிந்த பூம்பொழில் தேன்துளி
வீசுந் திருமிழலை
நிறைந்த அந்தணர் நித்தம் நாடொறும்
நேசத் தாலுமைப் பூசிக் கும்மிடம்
அறிந்து வீழிகொண் டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 6

பணிந்த பார்த்தன் பகீரதன்பல பத்தர்
சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ் செல்வம்
மல்கு திருமிழலை
தணிந்த அந்தணர் சந்தி நாடொறும்
அந்தி வானிடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண் டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 7

பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்
பார்த்துணுஞ் சுற்ற மாயினீர்
தெரிந்த நான்மறை யோர்க்கிடம்
ஆய திருமிழலை
இருந்து நீர்தமிழோ டிசைகேட்கும் மிச்சையாற்
காசு நித்தல்நல்கினீர்
அருந்தண் வீழிகொண் டீர்அடி
யேற்கும் அருளுதிரே. 8

தூய நீரமு தாய வாறது சொல்லு
கென்றுமைக் கேட்கச் சொல்லினீர்
தீய ராக் குலை யாளர்
செழுமாடத் திருமிழலை
மேய நீர்பலி ஏற்றதென் னென்றுவிண்
ணப்பஞ் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடி
யேற்கும் அருளுதிரே. 9

வேத வேதியர் வேத நீதியர்
ஓது வார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர்அடி
யேற்கும் அருளுகென்று
நாத கீதம்வண் டோதுவார்பொழில்
நாவலூரன்வன் றொண்டன் நற்றமிழ்
பாதம் ஓதவல் லார்பர
னோடு கூடுவரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment