முன்னைநான் மறையவை பாடல் வரிகள் (munnainan maraiyavai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தென்குடித்திட்டை – திட்டை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : தென்குடித்திட்டை – திட்டை
சுவாமி : பசுபதீசுவரர்
அம்பாள் : உலகநாயகியம்மை
முன்னைநான் மறையவை
முன்னைநான் மறையவை
முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ
நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி
வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல்
தென்குடித் திட்டையே. 1
மகரமா டுங்கொடி
மன்மத வேள்தனை
நிகரலா காநெருப்
பெழவிழித் தானிடம்
பகரபா ணித்தலம்
பன்மக ரத்தோடுஞ்
சிகரமா ளிகைதொகுந்
தென்குடித் திட்டையே. 2
கருவினா லன்றியே
கருவெலா மாயவன்
உருவினா லன்றியே
உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும்
பாடலோ டாடலுந்
திருவினான் மிகுபுகழ்த்
தென்குடித் திட்டையே. 3
உண்ணிலா வாவியா
யோங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா
வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக்
கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந்
தென்குடித் திட்டையே. 4
வருந்திவா னோர்கள்வந்
தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க்
கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப்
பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில்
தென்குடித் திட்டையே. 5
ஊறினார் ஓசையுள்
ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங்
குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்
தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந்
தென்குடித் திட்டையே. 6
கானலைக் கும்மவன்
கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத்
தேவுவைத் தானிடந்
தானலைத் தெள்ளமூர்
தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல்
தென்குடித் திட்டையே. 7
மாலொடும் பொருதிறல்
வாளரக் கன்நெரிந்
தோலிடும் படிவிர
லொன்றுவைத் தானிடங்
காலொடுங் கனகமூக்
குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல்
தென்குடித் திட்டையே. 8
நாரணன் தன்னொடு
நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி
காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ
சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த்
தென்குடித் திட்டையே. 9
குண்டிகைக் கையுடைக்
குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும்
பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில்
தண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல்
தென்குடித் திட்டையே. 10
தேனலார் சோலைசூழ்
தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில்
சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம்
பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க்
கில்லையாம் பாவமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்