மெய்த்தாறு சுவையும் பாடல் வரிகள் (meyttaru cuvaiyum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமுதுகுன்றம் – விருத்தாசலம் தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : நடுநாடு
தலம் : திருமுதுகுன்றம் – விருத்தாசலம்
சுவாமி : விருத்தகிரீஸ்வரர்
அம்பாள் : விருத்தாம்பிகை
மெய்த்தாறு சுவையும்
மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்
குணங்களும் விரும்புநால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
கருதுமூர் உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கும் முதுகுன்றமே. 1
வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற்
புகுந்துலவு முதுகுன்றமே. 2
தக்கனது பெருவேள்விச் சந்திரன்இந்
திரன்எச்சன் அருக்கன்அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு
குயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வயல்சூழ் முதுகுன்றமே. 3
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
அரியெரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடி
செய்த முதல்வனிடம் முதுகுன்றமே. 4
இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவும் உரியுடுத்த வொருவனிருப்
பிடமென்பர் உம்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவும் மால்யானை யிரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே. 5
நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகள் முகம்மலர
வயல்தழுவு முதுகுன்றமே. 6
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
இருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரம்ஐந்தின்
ஒன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்
கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே. 7
கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
றூன்றிமறை பாட ஆங்கே
முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
வாய்ந்தபதி முதுகுன்றமே. 8
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்
துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே. 9
மேனியில்சீ வரத்தாரும்விரிதருதட்
டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரியும் முதுகுன்றமே. 10
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும்இசை கூடும்வகை பாடுமவர்
நீடுலகம் ஆள்வர்தாமே.
திருச்சிற்றம்பலம்