மத்தக மணிபெற பாடல் வரிகள் (mattaka manipera) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிளமர் – விலாமால் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிளமர் – விலாமால்
சுவாமி : பதஞ்சலிமனோகரேசுவரர்
அம்பாள் : யாழினுமென்மொழியம்மை

மத்தக மணிபெற

மத்தக மணிபெற மலர்வதொர்
மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர்
அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெறு
கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில்
வளநகர் விளமரே. 1

பட்டில கியமுலை அரிவையர்
உலகினில் இடுபலி
ஒட்டில கிணைமர வடியினர்
உமையுறு வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர்
விடைமிசை சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவர்
உறைவது விளமரே. 2

அங்கதிர் ஒளியினர் அரையிடை
மிளிர்வதொர் அரவொடு
செங்கதி ரெனநிற மனையதொர்
செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொ
டிசைதரு சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ
ரிடமெனில் விளமரே. 3

மாடம தெனவளர் மதிலவை
யெரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர்
பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில்
இடமுற நடம்நவில்
வேடம துடையவர் வியன்நக
ரதுசொலில் விளமரே. 4

பண்டலை மழலைசெய் யாழென
மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு
மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய
அருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம்
வளநகர் விளமரே. 5

மனைகள்தொ றிடுபலி யதுகொள்வர்
மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய்
கறையணி மிடறினர்
முனைகெட வருமதிள் எரிசெய்த
அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர்
செழுநகர் விளமரே. 6

நெறிகமழ் தருமுரை யுணர்வினர்
புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர்
படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட அரவினர்
விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர்
இடமெனில் விளமரே. 7

தெண்கடல் புடையணி நெடுமதில்
இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த
பைங்கழல் வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை
புகுவதொர் சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம்
வளநகர் விளமரே. 8

தொண்டசை யுறவரு துயருறு
காலனை மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற
ஆரழ லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின
ரிடமெனில் அளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது
விரிபொழில் விளமரே. 9

ஒள்ளியர் தொழுதெழ வுலகினில்
உரைசெயு மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை
யவர்தவம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின்
பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர்
வளநகர் விளமரே. 10

வெந்தவெண் பொடியணி யடிகளை
விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த
தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர்
அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு
மவர்வினை பறையுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment