மாதமர் மேனிய பாடல் வரிகள் (matamar meniya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பூவணம் தலம் பாண்டியநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : பாண்டியநாடு
தலம் : திருப்பூவணம்
சுவாமி : பூவணநாதர்
அம்பாள் : மின்னனையாள்

மாதமர் மேனிய

மாதமர் மேனிய
னாகி வண்டொடு
போதமர் பொழிலணி
பூவ ணத்துறை
வேதனை விரவலர்
அரணம் மூன்றெய்த
நாதனை யடிதொழ
நன்மை யாகுமே. 1

வானணி மதிபுல்கு
சென்னி வண்டொடு
தேனணி பொழில்திருப்
பூவ ணத்துறை
ஆனநல் லருமறை
யங்கம் ஓதிய
ஞானனை யடிதொழ
நன்மை யாகுமே. 2

வெந்துய ருறுபிணி
வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு
பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ
டாறு சூடிய
நந்தியை யடிதொழ
நன்மை யாகுமே. 3

வாசநன் மலர்மலி
மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ்
பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந்
தேத்து வார்வினை
நாசனை யடிதொழ
நன்மை யாகுமே. 4

குருந்தொடு மாதவி
கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திருப்
பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம்
அரணம் மூன்றெய்த
பெருந்தகை யடிதொழப்
பீடை யில்லையே. 5

வெறிகமழ் புன்னைபொன்
ஞாழல் விம்மிய
பொறியர வணிபொழிற்
பூவ ணத்துறை
கிறிபடு முடையினன்
கேடில் கொள்கையன்
நறுமலர் அடிதொழ
நன்மை யாகுமே. 6

பறைமல்கு முழவொடு
பாடல் ஆடலன்
பொறைமல்கு பொழிலணி
பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன்
மாதோர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ
அல்லல் இல்லையே. 7

வரைதனை யெடுத்தவல்
லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன்
வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி
பூவ ணந்தனைப்
பரவிய அடியவர்க்
கில்லை பாவமே. 8

நீர்மல்கு மலருறை
வானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி
சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன்
மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந்
தேத்தல் இன்பமே. 9

மண்டைகொண் டுழிதரு
மதியில் தேரருங்
குண்டருங் குணமல
பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழில்
மல்கு பூவணங்
கண்டவர் அடிதொழு
தேத்தல் கன்மமே. 10

புண்ணியர் தொழுதெழு
பூவ ணத்துறை
அண்ணலை யடிதொழு
தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை
ஞான சம்பந்தன்
பண்ணிய தமிழ்சொலப்
பறையும் பாவமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment