மானேறு கரமுடைய பாடல் வரிகள் (maneru karamutaiya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலைமானேறு கரமுடைய
மானேறு கரமுடைய வரதர் போலும்
மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்
கானேறு கரிகதற வுரித்தார் போலுங்
கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்
தேனேறு திருஇதழித் தாரார் போலுந்
திருவீழி மிழலையமர் செல்வர் போலும்
ஆனேற தேறும் அழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 1
சமரமிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தாற் பிளப்பித்த சதுரர் போலும்
நமனையொரு கால்குறைத்த நாதர் போலும்
நாரணனை இடப்பாகத் தடைத்தார் போலுங்
குமரனையும் மகனாக வுடையார் போலுங்
குளிர்வீழி மிழலையமர் குழகர் போலும்
அமரர்கள்பின் அமுதுணநஞ் சுண்டார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 2
நீறணிந்த திருமேனி நிமலர் போலும்
நேமிநெடு மாற்கருளிச் செய்தார் போலும்
ஏறணிந்த கொடியுடையெம் மிறைவர் போலும்
எயில்மூன்று மெரிசரத்தா லெய்தார் போலும்
வேறணிந்த கோலமுடை வேடர் போலும்
வியன்வீழி மிழலையுறை விகிர்தர் போலும்
ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 3
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலுஞ்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலுந்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்க மானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 4
துன்னத்தின் கோவணமொன் றுடையார் போலுஞ்
சுடர்மூன்றுஞ் சோதியுமாய்த் தூயார் போலும்
பொன்னொத்த திருமேனிப் புனிதர் போலும்
பூதகணம் புடைசூழ வருவார் போலும்
மின்னொத்த செஞ்சடைவெண் பிறையார் போலும்
வியன்வீழி மிழலைசேர் விமலர் போலும்
அன்னத்தேர் அயன்முடிசேர் அடிகள் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 5
மாலாலும் அறிவரிய வரதர் போலும்
மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும்
நாலாய மறைக்கிறைவ ரானார் போலும்
நாமவெழுத் தஞ்சாய நம்பர் போலும்
வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 6
பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்
பைந்நாகம் அரைக்கசைத்த பரமர் போலும்
மஞ்சடுத்த மணிநீல கண்டர் போலும்
வடகயிலை மலையுடைய மணாளர் போலுஞ்
செஞ்சடைக்கண் வெண்பிறைகொண் டணிந்தார் போலுந்
திருவீழி மிழலையமர் சிவனார் போலும்
அஞ்சடக்கும் அடியவர்கட் கணியார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 7
குண்டரொடு பிரித்தெனையாட் கொண்டார் போலுங்
குடமூக்கி லிடமாக்கிக் கொண்டார் போலும்
புண்டரிகப் புதுமலரா தனத்தார் போலும்
புள்ளரசைக் கொன்றுயிர்பின் கொடுத்தார் போலும்
வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தர் போலும்
வியன்வீழி மிழலைநக ருடையார் போலும்
அண்டத்துப் புறத்தப்பா லானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 8
முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும்
மொய்பவளக் கொடியனைய சடையார் போலும்
எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும்
இருநான்கு மூர்த்திகளு மானார் போலும்
மித்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 9
கரியுரிசெய் துமைவெருவக் கண்டார் போலுங்
கங்கையையுஞ் செஞ்சடைமேற் கரந்தார் போலும்
எரியதொரு கைதரித்த இறைவர் போலும்
ஏனத்தின் கூனெயிறு பூண்டார் போலும்
விரிகதிரோ ரிருவரைமுன் வெகுண்டார் போலும்
வியன்வீழி மிழலையமர் விமலர் போலும்
அரிபிரமர் துதிசெயநின் றளித்தார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 10
கயிலாய மலையெடுத்தான் கதறி வீழக்
கால்விரலால் அடர்த்தருளிச் செய்தார் போலுங்
குயிலாய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்
கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதிவிளக் கானார் போலும்
வியன்வீழி மிழலையமர் விகிர்தர் போலும்
அயிலாய மூவிலைவேற் படையார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. 11
திருச்சிற்றம்பலம்