மையாடிய கண்டன்மலை பாடல் வரிகள் (maiyatiya kantanmalai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநெய்தானம் – தில்லைஸ்தானம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநெய்தானம் – தில்லைஸ்தானம்
சுவாமி : நெய்யாடியப்பர்
அம்பாள் : பாலாம்பிகை

மையாடிய கண்டன்மலை

மையாடிய கண்டன்மலை
மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி
யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர்
நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம்
நெய்த்தானமெ னீரே. 1

பறையும்பழி பாவம்படு
துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவும்படு
சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி
அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில்
நெய்த்தானமெ னீரே. 2

பேயாயின பாடப்பெரு
நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு
பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை
நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம்
நெய்த்தானமெ னீரே. 3

சுடுநீறணி யண்ணல்சுடர்
சூலம்மன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய
நம்பன் னுறையிடமாம்1
கடுவாளிள அரவாடுமிழ்
கடல்நஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர்
நெய்த்தானமெ னீரே.

பாடம் : 1 னுறைவிடமாம் 4

நுகராரமொ டேலம்மணி
செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனற்காவிரிப
ரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதன்கரை
நிகழ்வாய நெய்த்தான
நகரான்அடி யேத்தந்நமை
நடலை யடையாவே. 5

விடையார்கொடி யுடையவ்வணல்
வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைசடை
யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல்
பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவ ரென்றும்அம
ருலகம்மடை யாரே. 6

நிழலார்வயல் கமழ்சோலைகள்
நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனலங்கையி
லேந்தியழ காய
கழலானடி நாளுங்கழ
லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய
ரின்றித் தொழுவாரே. 7

அறையார்கடல் இலங்கைக்கிறை
யணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு
பதுதோளிற வூன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நன்
நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர்
கழலேத்துதல் கதியே. 8

கோலம்முடி நெடுமாலொடு
கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி
திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை
தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புகழ் அடியாருடல்
உறுநோய்நலி யாவே. 9

மத்தம்மலி சித்தத்திறை
மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி
பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை
நெய்த்தானம தேத்தும்
சித்தம்முடை யடியாருடல்
செறுநோயடை யாவே. 10

தலமல்கிய புனற்காழியுள்
தமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு
நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை
பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி
சேர்வர்சிவ கதியே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment