Sivan Songs

Kuzhaitha pathu lyrics in tamil | குழைத்த பத்து பாடல் வரிகள்

Kuzhaitha pathu lyrics in tamil

குழைத்த பத்து பாடல் வரிகள் (Kuzhaitha Pathu lyrics tamil)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு

சிறப்பு: ஆத்தும நிவேதனம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்
காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே
அம்மானே உன்னடியேற்கே. 1

அடியேன் அல்லல் எல்லாம்முன
அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே
ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்
கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால்
ஒன்றும் போதுமே. 2

ஒன்றும் போதா நாயேனை உய்யக்
கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை
பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா
மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள்
முக்கண் எம்மானே. 3

மானேர் நோக்கி மணவாளா மன்னே
நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப்
பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து
நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென்
றுன்னைக் கூறுவதே. 4

கூறும் நாவே முதலாகக் கூறுங்
கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமை
நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை
உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால்
தேற்ற வேண்டாவோ. 5

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட
முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி
என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே. 6

அன்றே என்றன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட
போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள்
முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ
இதற்கு நாயகமே. 7

நாயிற் கடையாம் நாயேனை நயந்து
நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான்
என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 8

கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன்
கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவையே
எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன்
கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை
சால அழகுடைத்தே. 9

அழகே புரிந்திட் டடிநாயேன்
அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி
என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண
நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே கோனே
என்னைக் குழைத்தாயே. 10

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment