குறுவித்த வாகுற்ற பாடல் வரிகள் (kuruvitta vakurra) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

குறுவித்த வாகுற்ற

குறுவித்த வாகுற்ற நோய்வினை
காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
அறிவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
செறிவித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 1

கூர்வித்த வாகுற்ற நோய்வினை
காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 2

தாக்கின வாசல மேவினை
காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின்
றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 3

தருக்கின நான்றக வின்றியு
மோடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின்
றேற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 4

இழிவித்த வாறிட்ட நோய்வினை
காட்டி இடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை
தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 5

இடைவித்த வாறிட்ட நோய்வினை
காட்டி இடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
அடைவித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 6

படக்கின வாபட நின்றுபன்
னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந்
தீவினை பாவமெல்லாம்
அடக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 7

மறப்பித்த வாவல்லை நோய்வினை
காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை
தீர்ப்பான் உகந்தருளி
இறப்பித்த வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 8

துயக்கின வாதுக்க நோய்வினை
காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை
தீர்ப்பான் இசைந்தருளி
அயக்கின வாறடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே. 9

கறுத்துமிட் டார்கண்டங் கங்கை
சடைமேற் கரந்தருளி
இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை
தன்னை இருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனைஐ
யாறன் அடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன்
பொன்னடிக் கீழெனையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment