குருகுபா யக்கொழுங் பாடல் வரிகள் (kurukupa yakkolun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்குருகுபா யக்கொழுங்

குருகுபா யக்கொழுங்
கரும்புகள் நெரிந்தசா
றருகுபா யும்வயல்
அந்தணா ரூரரைப்
பருகுமா றும்பணிந்
தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை
உணர்த்தவல் லீர்களே. 1

பறக்குமெங் கிள்ளைகாள்
பாடுமெம் பூவைகாள்
அறக்கண்என் னத்தகும்
அடிகளா ரூரரை
மறக்ககில் லாமையும்
வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும்
உணர்த்தவல் லீர்களே. 2

சூழுமோ டிச்சுழன்
றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல்
அடிகளா ரூரர்க்கு
வாழுமா றும்வளை
கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை
உணர்த்தவல் லீர்களே. 3

சக்கிரவா ளத்திளம்
பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும்
அடிகளா ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும்
வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையும்
உணர்த்தவல் லீர்களே. 4

இலைகொள்சோ லைத்தலை
இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை
அடிகளா ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங்
கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும்
மொழியவல் லீர்களே. 5

வண்டுகாள் கொண்டல்காள்
வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும்
அடிகளா ரூரரைக்
கண்டவா றுங்காமத்
தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை
உணர்த்தவல் லீர்களே. 6

தேனலங் கொண்டதேன்
வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம்
மடிகளா ரூரர்க்குப்
பானலங் கொண்டவெம்
பணைமுலை பயந்துபொன்
ஊனலங் கொண்டதும்
உணர்த்தவல் லீர்களே. 7

சுற்றுமுற் றுஞ்சுழன்
றுழலும்வெண் நாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந்
தடிகளா ரூரர்க்குப்
பற்றுமற் றின்மையும்
பாடுமற் றின்மையும்
உற்றுமற் றின்மையும்
உணர்த்த வல்லீர்களே. 8

குரவநா றக்குயில்
வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில்
அந்தணா ரூரரைப்
பரவிநா டும்மதும்
பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும்
உணர்த்தவல் லீர்களே. 9

கூடுமன் னப்பெடை
காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழல்
அடிகளா ரூரரைப்
பாடுமா றும்பணிந்
தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை
உணர்த்தவல் லீர்களே. 10

நித்தமா கந்நினைந்
துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழல்
அடிகளா ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச்
சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன
பாடுமின் பத்தரே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment