குலவு பாரிடம் பாடல் வரிகள் (kulavu paritam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் இந்திரநீலப்பருப்பதம் – நீலகண்டசிகரம் தலம் வடநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : வடநாடு
தலம் : இந்திரநீலப்பருப்பதம் – நீலகண்டசிகரம்
சுவாமி : நீலாசலநாதர்
அம்பாள் : நீலாம்பிகையம்மை
குலவு பாரிடம்
குலவு பாரிடம்
போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு
வேந்தும் அங்கையன்
நிலவும் இந்திர
நீலப் பர்ப்பதத்
துலவி னான்அடி
யுள்க நல்குமே. 1
குறைவி லார்மதி
சூடி யாடல்வண்
டறையு மாமலர்க்
கொன்றை சென்னிசேர்
இறைவன் இந்திர
நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை
யோதி யுய்ம்மினே. 2
என்பொன் என்மணி
யென்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை
பாடு நாவினான்
இன்பன் இந்திர
நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே
யடைந்து வாழ்மினே. 3
நாச மாம்வினை
நன்மை தான்வரும்
தேச மார்புக
ழாய செம்மையெம்
ஈசன் இந்திர
நீலப் பர்ப்பதம்
கூசி வாழ்த்துதுங்
குணம தாகவே. 4
மருவு மான்மட
மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை
தீர்த்த பண்பினான்
இரவன் இந்திர
நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடும்
அடிகள் வண்ணமே. 5
வெண்ணி லாமதி
சூடும் வேணியன்
எண்ணி லார்மதி
லெய்த வில்லினன்
அண்ணல் இந்திர
நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறும்
ஒருவன் நல்லனே. 6
கொடிகொள் ஏற்றினர்
கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற்
பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திர
நீலப் பர்ப்பதம்
உடைய வாண
ருகந்த கொள்கையே. 7
எடுத்த வல்லரக்
கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர
லான வனையாட்
படுத்தன் இந்திர
நீலப் பர்ப்பதம்
முடித்த லம்முற
முயலும் இன்பமே. 8
பூவி னானொடு
மாலும் போற்றுறும்
தேவன் இந்திர
நீலப் பர்ப்பதம்
பாவி யாதெழு
வாரைத் தம்வினை
கோவி யாவருங்
கொல்லுங் கூற்றமே. 9
கட்டர் குண்டமண்
தேரர் சீரிலர்
விட்டர் இந்திர
நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை
யாத தென்கொலோ
சிட்ட தாயுரை
யாதி சீர்களே. 10
கந்த மார்பொழில்
சூழ்ந்த காழியான்
இந்தி ரன்தொழு
நீலப் பர்ப்பதத்
தந்த மில்லியை
யேத்தும் ஞானசம்
பந்தன் பாடல்கொண்
டோதி வாழ்மினே.
இத்தலம் வடதேசத்திலுள்ளது.
திருச்சிற்றம்பலம்