குழைகொள் காதினர் பாடல் வரிகள் (kulaikol katinar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கடவூர் மயானம் – திருக்கடவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கடவூர் மயானம் – திருக்கடவூர்
சுவாமி : பிரமபுரீசுவரர்
அம்பாள் : மலர்க்குழன்மின்னம்மை

குழைகொள் காதினர்

குழைகொள் காதினர்
கோவண ஆடையர்
உழையர் தாங்கட
வூரின் மயானத்தார்
பழைய தம்மடி
யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர்
பெருமா னடிகளே. 1

உன்னி வானவர்
ஓதிய சிந்தையிற்
கன்னல் தேன்கட
வூரின் மயானத்தார்
தன்னை நோக்கித்
தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை என்னார்
பெருமா னடிகளே. 2

சூல மேந்துவர்
தோலுடை ஆடையர்
ஆல முண்டமு
தேமிகத் தேக்குவர்
கால காலர்
கடவூர் மயானத்தார்
மாலை மார்பர்
பெருமா னடிகளே. 3

இறைவ னாரிமை
யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட
வூரின் மயானத்தார்
அறவ னாரடி
யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர்
பெருமா னடிகளே. 4

கத்து காளி
கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட
வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன
செய்துழல் வாரொரு
பித்தர் காணும்
பெருமா னடிகளே. 5

எரிகொள் மேனி
இளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட
வூரின் மயானத்தார்
அரியர் அண்டத்து
ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும்
பெருமா னடிகளே. 6

அணங்கு பாகத்தர்
ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட
வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர்
தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர்
பெருமா னடிகளே. 7

அரவு கையினர்
ஆதி புராணனார்
மரவு சேர்கட
வூரின் மயானத்தார்
பரவு வாரிடர்
தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும்
பெருமா னடிகளே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment