கோயில் மூத்த திருப்பதிகம் – kovil mootha thirupathigam lyrics

திருச்சிற்றம்பலம் – kovil mootha thirupathigam lyrics

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள்
நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப
தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி
யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும்
வண்ணம் முன்னின்றே. 1

முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும்
அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட்
டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி
டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம்
பலக்கூத் துகந்தானே. 2

உகந்தானே அன்புடை அடிமைக் குருகா
வுள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்க
வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ
வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம்
பலத்தெம் முழுமுதலே. 3

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்
கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார்
திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்
குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன்
பொன்னம் பலத்தரைசே. 4

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்
றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா
திருந்தால் ஏசாரோ. 5

ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான்
என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா
நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ
லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய்
இனித்தான் இரங்காயே. 6

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று
ஏமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று
நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே
வாவென்று அருளாயே. 7

அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல்
என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே
பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து
வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே
போனாற் சிரியாரோ. 8

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு
திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே
றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா
என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி
இனித்தான் நல்காயே. 9

நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம்
பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா
மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப்
பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய்
என்னை உடையானே. 10

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: அநாதியாகிய சற்காரியம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

Leave a Comment