கோவாய் முடுகி பாடல் வரிகள் (kovay mutuki) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சத்திமுற்றம் – திருச்சத்திமுத்தம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சத்திமுற்றம் – திருச்சத்திமுத்தம்
சுவாமி : சிவக்கொழுந்தீசுவரர்
அம்பாள் : பெரியநாயகியம்மை
கோவாய் முடுகி
கோவாய் முடுகி யடுதிறற்
கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்
பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்
டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 1
காய்ந்தாய் அனங்கன் உடலம்
பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்
பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்
கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 2
பொத்தார் குரம்பை புகுந்தைவர்
நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென்
சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங்
கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 3
நில்லாக் குரம்பை நிலையாக்
கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு
வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள்
கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 4
கருவுற் றிருந்துன் கழலே
நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள்
கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 5
வெம்மை நமன்தமர் மிக்கு
விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சத்
தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி
யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 6
விட்டார் புரங்கள் ஒருநொடி
வேவவொர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத்
தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள்
பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 7
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்
டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங்
கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 8
தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்
துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற
மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா
மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே. 9
பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்
புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்
டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்