கொம்பிரிய வண்டுலவு பாடல் வரிகள் (kompiriya vantulavu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அவளிவணல்லூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அவளிவணல்லூர்
சுவாமி : சாட்சிநாயகர்
அம்பாள் : சவுந்தரநாயகியம்மை

கொம்பிரிய வண்டுலவு

கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி
நூலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட
வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில்
கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ
தவளிவண லூரே. 1

ஓமையன கள்ளியன வாகையன
கூகைமுர லோசை
ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது
காடுநட மாடித்
தூய்மையுடை அக்கொடர வம்விரவி
மிக்கொளி துளங்க
ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ
தவளிவண லூரே. 2

நீறுடைய மார்பில்இம வான்மகளொர்
பாகம்நிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ
காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவில்
நின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னான்உறைவ
தவளிவண லூரே. 3

பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர்
என்றுலகு பேணிப்
பணியும்அடி யார்களன பாவம்அற
இன்னருள் பயந்து
துணியுடைய தோலுமுடை கோவணமும்
நாகமுடல் தொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ
தவளிவண லூரே. 4

குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன
பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு
ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு
நோயுமில ராவர்
அழலுமழு ஏந்துகையி னானுறைவ
தவளிவண லூரே. 5

துஞ்சலில ராயமரர் நின்றுதொழு
தேத்தஅருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயஎளி
தாகியொரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்கஅக
லத்தொடு வளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ
தவளிவண லூரே. 6

கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி
னோடும்இசை செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து
பேரிடப மோடுங்
காடரவ மாகுகனல் கொண்டிரவில்
நின்றுநட மாடி
ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ
தவளிவண லூரே. 7

ஒருவரையும் மேல்வலிகொ டேனென
எழுந்தவிற லோன்இப்
பெருவரையின் மேலொர்பெரு மானுமுள
னோவென வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல்
கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ
தவளிவண லூரே. 8

பொறிவரிய நாகமுயர் பொங்கணைய
ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர்
மேல்விழுமி யோனுஞ்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக
நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ
தவளிவண லூரே. 9

கழியருகு பள்ளியிட மாகவடு
மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசி
லுள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு
நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ
தவளிவண லூரே. 10

ஆனமொழி யானதிற லோர்பரவும்
அவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழிக ளாயபுகழ்
தோணிபுர வூரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ்
ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள்
தீயதிலர் தாமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment