காட தணிகலங் காரர பாடல் வரிகள் (kata tanikalan karara) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி

காட தணிகலங் காரர

காட தணிகலங் காரர
வம்பதி காலதனில்
தோட தணிகுவர் சுந்தரக்
காதினில் தூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற்
குருவம்வில் லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப்
பிரம புரத்தரரே. 1

கற்றைச் சடையது கங்கண
முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத்
தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது
கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு
புரத்தெங்கள் வேதியரே. 2

கூவிளங் கையது பேரி
சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது
பூசிற்றுத் துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லானையும்
பாகம் உரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுள்
மேவிய புண்ணியரே. 3

உரித்தது பாம்பை யுடல்மிசை
இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொ ராமையை இன்புறப்
பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத்
தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குருவில்
வீற்றிருந் தவரே. 4

கொட்டுவர் அக்கரை யார்ப்பது
தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில
ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர்
மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி
புரத்துறை சுந்தரரே. 5

சாத்துவர் பாசந் தடக்கையி
லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின்
றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை
சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய்
மேவிய புண்ணியரே. 6

காலது கங்கைகற் றைச்சடை
யுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது
பாகம்வளர் கொழுங்கோட்
டாலது வூர்வர் அடலேற்
றிருப்பர் அணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர்
சிரபுரம் மேயவரே. 7

நெருப்புரு வெள்விடை மேனியர்
ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக்
காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை
யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற
வத்தணி புண்ணியரே. 8

இலங்கைத் தலைவனை யேந்திற்
றிறுத்த திரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது
மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையி னாடுவர்
கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயற் சண்பையுள்
மேவிய தத்துவரே. 9

அடியிணை கண்டிலன் தாமரை
யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந்
தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற்
பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுள்
மேய கறைக்கண்டரே. 10

கையது வெண்குழை காதது
சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை யடியவர்
எய்தாரோர் ஏனக்கொம்பு
மெய்திகழ் கோவணம்பூண்ப
துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுள்
மேவிய கொற்றவரே. 11

கல்லுயர் கழுமல இஞ்சியுள்
மேவிய கடவுள் தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா
னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை
வானவர் தங்களொடுஞ்
செல்குவர் சீரரு ளாற்பெற
லாஞ்சிவ லோகமதே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment