கற்றாங் கெரியோம்பிக் கலியை பாடல் வரிகள் (karran keriyompik kaliyai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கோயில் – சிதம்பரம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கோயில் – சிதம்பரம்
சுவாமி : ஆனந்த நடராஜர்
அம்பாள் : சிவகாமசுந்தரி
கற்றாங் கெரியோம்பிக் கலியை
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே. 2
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. 3
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே. 4
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 5
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. 6
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே. 7
கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே. 8
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. 9
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே. 10
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.
திருச்சிற்றம்பலம்