கரையுங் கடலும் மலையுங் பாடல் வரிகள் (karaiyun katalum malaiyun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்கரையுங் கடலும் மலையுங்

கரையுங் கடலும் மலையுங்
காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான்
ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன்
வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 1

தனியனென் றெள்கி அறியேன்
தம்மைப் பெரிது முகப்பன்
முனிபவர் தம்மை முனிவன்
முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக்
காய்க்குலை ஈன்ற கமுகின்
இனிய னிருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 2

சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்
தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன்
கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான்
அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 3

நெறியும் அறிவுஞ் செறிவும்
நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன்
வேண்டிற்றுச் செய்து திரிவன்
பிறையும் அரவும் புனலும்
பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 4

நீதியில் ஒன்றும் வழுவேன்
நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன்
வெகுண்டவர்க் குந்துணை ஆகேன்
சோதியிற் சோதிஎம் மானைச்
சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 5

அருத்தம் பெரிதும் உகப்பன்
அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன்
உற்றவர்க் குந்துணை அல்லேன்
பொருத்தமே லொன்று மிலாதேன்
புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 6

சந்தம் பலஅறுக் கில்லேன்
சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி
மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக்
கண்ணியன் விண்ணவ ரேத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 7

நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன்
நிச்சய மேயிது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி உணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 8

நமர்பிறர் என்ப தறியேன்
நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன்
தக்கவா றொன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன்
கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 9

ஆசை பலஅறுக் கில்லேன்
ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன்
பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன்
ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர். 10

எந்தை இருப்பதும் ஆரூர்அவர்
எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான்
திருமரு வுந்திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும்
வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார்
தாம்புகழ் எய்துவார் தாமே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment