கண்ணவன்காண் கண்ணொளிசேர் பாடல் வரிகள் (kannavankan kannolicer) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலைகண்ணவன்காண் கண்ணொளிசேர்
கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண்
கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்ற
பண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண்
பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்
மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண்
வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்
விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 1
ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 2
தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண்
சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்
கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண்
காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்
எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண்
இருவர்க் கெரியா யருளி னான்காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 3
காதிசைந்த சங்கக் குழையி னான்காண்
கனக மலையனைய காட்சி யான்காண்
மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண்
வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்
ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்
வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 4
நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண்
நித்தமண வாளனென நிற்கின் றான்காண்
கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்
காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்
செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண்
செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்
வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 5
கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக்
கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்
வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம்
வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்
பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்
பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்
வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 6
கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 7
மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம்
விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்
பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி
எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்
உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை
உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்
வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 8
சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண்
தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்
இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண்
ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்
மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண்
மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண்
விண்ணிழிதண் வீழி மிழலை யானே. 9
ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண்
எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்
ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும்
ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்
கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண்
கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்
வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண்
விண்ணிழிதண்வீழி மிழலை யானே. 10
திருச்சிற்றம்பலம்