கலைமலி யகலல்குல் பாடல் வரிகள் (kalaimali yakalalkul) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சிவபுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : சிவபுரம்
சுவாமி : சிவகுருநாதசுவாமி
அம்பாள் : ஆர்யாம்பாள்
கலைமலி யகலல்குல்
கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே. 1
படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே. 2
வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே. 3
துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே. 4
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமையுடை யவனே. 5
முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே. 6
வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை யிலரே. 7
கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே. 8
அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே. 9
புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே. 10
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
திருச்சிற்றம்பலம்