Thursday, November 13, 2025
HomeSivan Songsகைம்மான மதகளிற்றி னுரிவை பாடல் வரிகள் | kaim mana matakalirri nurivai Thevaram song...

கைம்மான மதகளிற்றி னுரிவை பாடல் வரிகள் | kaim mana matakalirri nurivai Thevaram song lyrics in tamil

கைம்மான மதகளிற்றி னுரிவை பாடல் வரிகள் (kaim mana matakalirri nurivai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்கைம்மான மதகளிற்றி னுரிவை

கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 1

ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்
அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 2

ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 3

கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்
பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 4

காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 5

பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 6

தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்
அலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண்
அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 7

ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 8

மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 9

பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. 10

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments