எய்யா வென்றித் பாடல் வரிகள் (eyya venrit) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புறவம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புறவம் – சீர்காழி
சுவாமி : தோணியப்பர்
அம்பாள் : திருநிலைநாயகி

எய்யா வென்றித்

எய்யா வென்றித் தானவ ரூர்மூன் றெரிசெய்த
மையார் கண்டன் மாதுமை வைகுந் திருமேனிச்
செய்யான் வெண்ணீ றணிவான் திகழ்பொற் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவம்மே. 1

மாதொரு பாலும் மாலொரு பாலும் மகிழ்கின்ற
நாதனென் றேத்தும் நம்பரன் வைகுந் நகர்போலும்
மாதவி மேய வண்டிசை பாட மயிலாடப்
போதலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவம்மே. 2

வற்றா நதியும் மதியும் பொதியுஞ் சடைமேலே
புற்றா ரரவின் படமா டவுமிப் புவனிக்கோர்
பற்றா யிடுமின் பலியென் றடைவார் பதிபோலும்
பொற்றா மரையின் பொய்கை நிலாவும் புறவம்மே. 3

துன்னார் புரமும் பிரமன் சிரமுந் துணிசெய்து
மின்னார் சடைமேல் அரவும் மதியும் விளையாடப்
பன்னா ளிடுமின் பலியென் றடைவார் பதிபோலும்
பொன்னார் புரிநூல் அந்தணர் வாழும் புறவம்மே. 4

தேவா அரனே சரணென் றிமையோர் திசைதோறுங்
காவா யென்று வந்தடை யக்கார் விடம்உண்டு
பாவார் மறையும் பயில்வோ ருறையும் பதிபோலும்
பூவார் கோலச் சோலைசுலாவும் புறவம்மே. 5

கற்றறி வெய்திக் காமன்முன் னாகும் முகவெல்லாம்
அற்றர னேநின் னடிசர ணென்னும் அடியோர்க்குப்
பற்றது வாய பாசுப தன்சேர் பதியென்பர்
பொற்றிகழ் மாடத் தொளிகள் நிலாவும் புறவம்மே. 6

எண்டிசை யோரஞ் சிடுவகை கார்சேர் வரையென்னக்
கொண்டெழு கோல முகில்போற் பெரிய கரிதன்னைப்
பண்டுரி செய்தோன் பாவனை செய்யும் பதியென்பர்
புண்டரி கத்தோன் போன்மறை யோர்சேர் புறவம்மே. 7

பரக்குந் தொல்சீர்த் தேவர்கள் சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ் செந்தீப் போலமர் செய்யுந் தொழில்மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித் தானக் காலத்திற்
புரக்கும் வேந்தன் சேர்தரு மூதூர் புறவம்மே. 8

மீத்திக ழண்டந் தந்தய னோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொ ணாது முயல்விட்டாங்
கேத்த வெளிப்பா டெய்திய வன்றன் இடமென்பர்
பூத்திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவம்மே. 9

வையகம் நீர்தீ வாயுவும் விண்ணும் முதலானான்
மெய்யல தேரர் உண்டிலை யென்றே நின்றேதம்
கையினி லுண்போர் காண வொணாதான் நகரென்பர்
பொய்யக மில்லாப் பூசுரர் வாழும் புறவம்மே. 10

பொன்னியல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன்னியல் பில்லாச் சண்பையர் கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசை ஈரைந் தேத்தவல் லோர்கட் கிடர்போமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment