ஏயி லானையெ பாடல் வரிகள் (eyi lanaiye) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தனி தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : தனிஏயி லானையெ
ஏயி லானையெ
னிச்சை யகம்படிக்
கோயி லானைக்
குணப்பெருங் குன்றினை
வாயி லானை
மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத்
தழுவுமென் ஆவியே. 1
முன்னை ஞான
முதற்றனி வித்தினைப்
பின்னை ஞானப்
பிறங்கு சடையனை
என்னை ஞானத்
திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத்
தளையிட்டு வைப்பனே. 2
ஞானத் தாற்றொழு
வார்சில ஞானிகள்
ஞானத் தாற்றொழு
வேனுனை நானலேன்
ஞானத் தாற்றொழு
வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை
நானுந் தொழுவனே. 3
புழுவுக் குங்குணம்
நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக்
குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடையேன்புனி
தன்றமர்
குழுவுக் கெவ்விடத்
தேன்சென்று கூடவே. 4
மலையே வந்து
விழினும் மனிதர்காள்
நிலையி னின்று
கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய
ஈசன் றமர்களைக்
கொலைசெய் யானைதான்
கொன்றிடு கிற்குமே. 5
கற்றுக் கொள்வன
வாயுள நாவுள
இட்டுக் கொள்வன
பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை
யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம
னால்முனி வுண்பதே. 6
மனிதர் காளிங்கே
வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி
யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல்
ஈசனெ னுங்கனி
இனிது சாலவும்
ஏசற் றவர்கட்கே. 7
என்னை யேதும்
அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமு
னேது மறிந்திலேன்
என்னைத் தன்னடி
யானென் றறிதலுந்
தன்னை நானும்
பிரானென் றறிந்தெனே. 8
தெள்ளத் தேறித்
தெளிந்துதித் திப்பதோர்
உள்ளத் தேறல்
அமுத ஒளிவெளி
கள்ளத் தேன்கடி
யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ்
வாறு விளைந்ததே. 9
இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10
திருச்சிற்றம்பலம்