எப்போ தும்மிறை பாடல் வரிகள் (eppo tum mirai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை
எப்போ தும்மிறை
எப்போ தும்மிறை
யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர
மன்றொழ நின்றவன்
செப்போ தும்பொனின்
மேனிச் சிவனவன்
அப்போ தைக்கஞ்சல்
என்னும்ஆ ரூரனே. 1
சடையின் மேலுமொர்
தையலை வைத்தவர்
அடைகி லாவர
வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங்
கண்ணுமை பாகமா
அடைவர் போல்இடு
காடர்ஆ ரூரரே. 2
விண்ட வெண்டலை
யேகல னாகவே
கொண்ட கம்பலி
தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை
வைத்த இறையவர்
அண்ட வாணர்க்
கருளும்ஆ ரூரரே. 3
விடையும் ஏறுவர்
வெண்டலை யிற்பலி
கடைகள் தோறுந்
திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை
உறைவது காட்டிடை
அடைவர் போல்அரங்
காகஆ ரூரரே. 4
துளைக்கை வேழத்
துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையொர்
பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட்
சடையிற் திசைமுழு
தளக்குஞ் சிந்தையர்
போலும்ஆ ரூரரே. 5
பண்ணின் இன்மொழி
யாளையோர் பாகமா
விண்ணி னார்விளங்
கும்மதி சூடியே
சுண்ண நீறுமெய்ப்
பூசிச் சுடலையின்
அண்ணி யாடுவர்
போலும்ஆ ரூரரே. 6
மட்டு வார்குழ
லாளொடு மால்விடை
இட்ட மாவுகந்
தேறும் இறைவனார்
கட்டு வாங்கங்
கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய
மாகும்ஆ ரூரரே. 7
தேய்ந்த திங்கள்
கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள்
ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை
நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை
யோதும்ஆ ரூரரே. 8
உண்டு நஞ்சுகண்
டத்துள் அடக்கியங்
கிண்டை செஞ்சடை
வைத்த இயல்பினான்
கொண்ட கோவண
ஆடையன் கூரெரி
அண்ட வாணர்
அடையும்ஆ ரூரரே. 9
மாலும் நான்முக
னும்மறி கிற்கிலார்
கால னாய
அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு
வேந்திய கையினார்
ஆலம் உண்டழ
காயஆ ரூரரே.
திருச்சிற்றம்பலம்