எந்தமது சிந்தைபிரி பாடல் வரிகள் (entamatu cintaipiri) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சண்பைநகர் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருச்சண்பைநகர் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

எந்தமது சிந்தைபிரி

எந்தமது சிந்தைபிரி யாதபெரு
மானெனஇ றைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு
தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்
செய்யஅமர் கின்றஅழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு
மேவுபதி சண்பைநகரே. 1

அங்கம்விரி துத்தியர வாமைவிர
வாரமமர் மார்பிலழகன்
பங்கயமு கத்தரிவை யோடுபிரி
யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரைகொ ணர்ந்துபவ
ளத்திரள்பொ லிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்பி
றங்கொளிகொள் சண்பைநகரே. 2

போழுமதி தாழுநதி பொங்கரவு
தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள
மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை
துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென
உந்துதகு சண்பைநகரே. 3

கொட்டமுழ விட்டவடி வட்டணைகள்
கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி
பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது
வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமரு வெட்டும்வளர்
தத்தைபயில் சண்பைநகரே. 4

பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி
யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை
யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதில்
நீடுவிரை யார்புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொள் தாமரையில்
அன்னம்வளர் சண்பைநகரே. 5

பாலனுயிர் மேலணவு காலனுயிர்
பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி ஆயிழைத
னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர்
கிண்டிநற வுண்டிசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள
நீலம்வளர் சண்பைநகரே. 6

விண்பொய்அத னால்மழைவி ழாதொழியி
னும்விளைவு தான்மிகவுடை
மண்பொய்அத னால்வளமி லாதொழியி
னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல
தோறும்நிலை யானபதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழுமடி
யார்தமது தன்மையதுவே. 7

வரைக்குல மகட்கொரு மறுக்கம்வரு
வித்தமதி யில்வலியுடை
யரக்கனது ரக்கரசி ரத்துறவ
டர்த்தருள் புரிந்தஅழகன்
இருக்கையத ருக்கன்முத லானஇமை
யோர்குழுமி யேழ்விழவினிற்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்
கொண்டலன சண்பைநகரே. 8

நீலவரை போலநிகழ் கேழலுரு
நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர்
தீயுருவ மானவரதன்
சேலும்இன வேலும்அன கண்ணியொடு
நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு
கிள்ளைபயில் சண்பைநகரே. 9

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு
வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை
நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை ஆளுடைய அரிவையொடு
பிரிவிலி அமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரைகொ ணர்ந்துவயல்
புகஎறிகொள் சண்பைநகரே. 10

வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு
சங்கரன்ம கிழ்ந்தமருமூர்
சாரின்முரல் தெண்கடல்வி சும்புறமு
ழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
சேர்வர்சிவ லோகநெறியே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment