என்பொ னேயிமை பாடல் வரிகள் (enpo neyimai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

என்பொ னேயிமை

என்பொ னேயிமை
யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநலந்
தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு
வீழி மிழலையுள்
அன்ப னேயடி
யேனைக் குறிக்கொளே. 1

கண்ணி னாற்களி
கூரக்கை யாற்றொழு
தெண்ணு மாறறி
யாதிளைப் பேன்றனை
விண்ணு ளார்தொழும்
வீழி மிழலையுள்
அண்ண லேயடி
யேனைக் குறிக்கொளே. 2

ஞால மேவிசும்
பேநலந் தீமையே
கால மேகருத்
தேகருத் தாற்றொழுஞ்
சீல மேதிரு
வீழி மிழலையுள்
கோல மேயடி
யேனைக் குறிக்கொளே. 3

முத்த னேமுதல்
வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு
வாவுரு வாகிய
சித்த னேதிரு
வீழி மிழலையுள்
அத்த னேயடி
யேனைக் குறிக்கொளே. 4

கருவ னேகரு
வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேஉயிர்ப்
பாய்உணர் வாய்நின்ற
திருவ னேதிரு
வீழி மிழலையுள்
குருவ னேயடி
யேனைக் குறிக்கொளே. 5

காத்த னேபொழி
லேழையுங் காதலால்
ஆத்த னேஅம
ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு
வீழி மிழலையுள்
கூத்த னேயடி
யேனைக் குறிக்கொளே. 6

நீதி வானவர்
நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ
ரும்முண ராததோர்
வேதி யாவிகிர்
தாதிரு வீழியுள்
ஆதி யேயடி
யேனைக் குறிக்கொளே. 7

பழகி நின்னடி
சூடிய பாலனைக்
கழகின் மேல்வைத்த
காலனைச் சாடிய
அழக னேயணி
வீழி மிழலையுள்
குழக னேயடி
யேனைக் குறிக்கொளே. 8

அண்ட வானவர்
கூடிக் கடைந்தநஞ்
சுண்ட வானவ
னேஉணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில்
வீழி மிழலையுள்
கொண்ட னேயடி
யேனைக் குறிக்கொளே. 9

ஒருத்தன் ஓங்கலைத்
தாங்கலுற் றானுரம்
வருத்தி னாய்வஞ்ச
னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு
வீழி மிழலையுள்
அருத்த னேயடி
யேனைக் குறிக்கொளே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment