எம்பந்த வல்வினைநோய் பாடல் வரிகள் (empanta valvinainoy) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்எம்பந்த வல்வினைநோய்

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 1

அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந்
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 2

நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்
வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 3

கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 4

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 5

சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண்
தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக
அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 6

நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண்
சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 7

பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 8

விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்
தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 9

செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
தென்னானைக் காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்
அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்று
திருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற்
றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment