Sivan Songs

சொல்லானைப் பொருளானைச் பாடல் வரிகள் | collanaip porulanaic Thevaram song lyrics in tamil

சொல்லானைப் பொருளானைச் பாடல் வரிகள் (collanaip porulanaic) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாரையூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநாரையூர்சொல்லானைப் பொருளானைச்

சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை
அல்லானைப் பகலானை அரியான் றன்னை
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 1

பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்
மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 2

மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
நாவானை நாவினில்நல் லுரையா னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 3

செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 4

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 5

பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்
பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானை
மலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரா னானை
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 7

அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை
நரிவிரவு காட்டகத்தி லாட லானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 8

ஆலால மிடற்றணியா அடக்கி னானை
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி
வேள்வியினின் பயனாய விமலன் றன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 9

மீளாத ஆளென்னை உடையான் றன்னை
வெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து
வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்
தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment