சித்தந் தெளிவீர்காள் – திருவிருக்குக்குறள் பாடல் வரிகள் (cittan telivirkal – tiruvirukkukkural) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை

சித்தந் தெளிவீர்காள் – திருவிருக்குக்குறள்

சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே. 1

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே. 2

துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 3

உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னால்தொழ, நையும் வினைதானே. 4

பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே. 5

பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே. 6

வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்
செய்ய மலர்தூவ, வையம் உமதாமே. 7

அரக்கன் ஆண்மையை, நெருக்கி னான்ஆரூர்
கரத்தி னால்தொழத், திருத்த மாகுமே. 8

துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை
உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே. 9

கடுக்கொள் சீவரை, அடக்கி னான்ஆரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. 10

சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment