செந்நெ லங்கழ பாடல் வரிகள் (cenne lankala) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பூந்தராய் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பூந்தராய் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

செந்நெ லங்கழ

செந்நெ லங்கழ னிப்பழ
னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ
ளம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி
தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை
பாம்புடன் வைத்ததே. 1

எற்று தெண்டிரை யேறிய
சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ
னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு
பொற்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை
யோபெரு மானிரே. 2

சங்கு செம்பவ ளத்திரள்
முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக்
கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி
போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ
டொன்றிய மாண்பதே. 3

சேம வன்மதில் பொன்னணி
மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில்
சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர்
செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக்
கடைக்கண் சிவந்ததே. 4

பள்ள மீன்இரை தேர்ந்துழ
லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில்
சூழ்தரு பூந்தராய்த்
துள்ளும் மான்மறி யேந்திய
செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை
வைத்த வியப்பதே. 5

மாதி லங்கிய மங்கைய
ராடம ருங்கெலாம்
போதி லங்கம லம்மது
வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண்
ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண்
தோடுடன் வைத்ததே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 7

வருக்க மார்தரு வான்கடு
வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி
மாந்திய பூந்தராய்த்
துரக்கும் மால்விடை மேல்வரு
வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு
ளாக்கிய ஆக்கமே. 8

வரிகொள் செங்கயல் பாய்புனல்
சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம்நி
லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல்
தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு
மைக்கண்டி லாமையே. 9

வண்ட லங்கழ னிம்மடை
வாளைகள் பாய்புனற்
புண்டரீ கமலர்ந் துமதுத்
தருபூந் தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய்
தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய
தாங்குறி யின்மையே. 10

மகர வார்கடல் வந்தண
வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்
எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல்
மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை
யோடுட னாவரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment