சந்தமார் அகிலொடு பாடல் வரிகள் (cantamar akilotu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்காளத்தி தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்காளத்தி
சுவாமி : குடுமித்தேவர்
அம்பாள் : ஞானப் பூங்கோதை

சந்தமார் அகிலொடு

சந்தமார் அகிலொடு
சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின்
கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர்
மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி
யென்மனத் துள்ளவே. 1

ஆலமா மரவமோ
டமைந்தசீர்ச் சந்தனஞ்
சாலமா பீலியுஞ்
சண்பக முந்தியே
காலமார் முகலிவந்
தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை
நினையுமா நினைவதே. 2

கோங்கமே குரவமே
கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு
முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி
யடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும்
வீடெளி தாகுமே. 3

கரும்புதேன் கட்டியுங்
கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின்
கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன்
காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கள்தாம்
விண்ணுல காள்வரே. 4

வரைதரும் அகிலொடு
மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின்
கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக்
காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை
நித்தலும் நினைமினே. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 7

முத்துமா மணிகளும்
முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின்
கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக்
கால்விரல் ஊன்றிய
அத்தன்றன் காளத்தி
அணைவது கருமமே. 8

மண்ணுமா வேங்கையும்
மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின்
கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன்
மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி
ஆங்கணைந் துய்ம்மினே. 9

வீங்கிய உடலினர்
விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும்
பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி
யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை
வானவர்க் கொருவனே. 10

அட்டமா சித்திகள்
அணைதரு காளத்தி
வட்டவார் சடையனை
வயலணி காழியான்
சிட்டநான் மறைவல
ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க்
கில்லையாம் பாவமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment