சந்த மார்முலை பாடல் வரிகள் (canta marmulai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

சந்த மார்முலை

சந்த மார்முலை
யாள்தன கூறனார்
வெந்த வெண்பொடி
யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில்
சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி
யென்மனத் துள்ளவே. 1

மானி டம்முடை
யார்வளர் செஞ்சடைத்
தேனி டங்கொளுங்
கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந்
தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டென்
உச்சியில் நிற்பரே. 2

மைகொள் கண்டத்தர்
வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர
வாட்டும் படிறனார்
கைகொள் மான்மறி
யார்கடற் காழியுள்
ஐயன் அந்தணர்
போற்ற இருக்குமே. 3

புற்றின் நாகமும்
பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை
வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ
டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுடன்
ஏத்தி யுணருமே. 4

நலியுங் குற்றமும்
நம்முட னோய்வினை
மெலியு மாறது
வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை
யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை
யாரடி போற்றுமே. 5

பெண்ணொர் கூறினர்
பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்திசை
பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை
யார்கடற் காழியுள்
அண்ண லாய
அடிகள் சரிதையே. 6

பற்று மானும்
மழுவும் அழகுற
முற்று மூர்திரிந்
துபலி முன்னுவர்
கற்ற மாநன்
மறையவர் காழியுட்
பெற்றம் ஏற
துகந்தார் பெருமையே. 7

எடுத்த வல்லரக்
கன்முடி தோளிற
அடர்த்து கந்தருள்
செய்தவர் காழியுள்
கொடித்த யங்குநற்
கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு
தாமும் இருப்பரே. 8

காலன் தன்னுயிர்
வீட்டு கழலடி
மாலு நான்முகன்
தானும் வனப்புற
ஓல மிட்டுமுன்
தேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ
னூர்திகழ் காழியே. 9

உருவ நீத்தவர்
தாமும் உறுதுவர்
தருவ லாடையி
னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி
ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி
யேயடைந் துய்ம்மினே. 10

கானல் வந்துல
வுங்கடற் காழியுள்
ஈன மில்லி
இணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன்
சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும்
மகிழ்ந்துரை செய்யவே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment