அடையார் புரம்மூன்றும் பாடல் வரிகள் (ataiyar puram munrum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அம்பர் மாகாளம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அம்பர் மாகாளம்
சுவாமி : காளகண்டேஸ்சுவரர்
அம்பாள் : பட்சநாயகி

அடையார் புரம்மூன்றும்

அடையார் புரம்மூன்றும் அனல்வாய்விழ வெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. 1

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. 2

திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கள்மேல் ஒழியா வூனம்மே. 3

கொந்தண்1 பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தம் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.

பாடம் : 1 கொந்தம் 4

அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. 5

பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. 6

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. 7

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 8

சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
இறையான் கழலேத்த எய்தும் இன்பமே. 9

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட் கில்லையிடர் தானே. 10

வெருநீர்2 கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே.

பாடம் : 2 வெரிநீர்.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment