அருவ னாய்அத்தி பாடல் வரிகள் (aruva nayatti) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பழனம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பழனம்
சுவாமி : ஆபத்சகாயர்
அம்பாள் : பெரியநாயகியம்மை
அருவ னாய்அத்தி
அருவ னாய்அத்தி
ஈருரி போர்த்துமை
உருவ னாய்ஒற்றி
யூர்பதி யாகிலும்
பருவ ரால்வயல்
சூழ்ந்த பழனத்தான்
திருவி னாற்றிரு
வேண்டுமித் தேவர்க்கே. 1
வையம் வந்து
வணங்கி வலங்கொளும்
ஐய னைஅறி
யார்சிலர் ஆதர்கள்
பைகொ ளாடர
வார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள்
போக்கிடு வார்களே. 2
வண்ண மாக
முறுக்கிய வாசிகை
திண்ண மாகத்
திருச்சடைச் சேர்த்தியே
பண்ணு மாகவே
பாடும் பழனத்தான்
எண்ணும் நீரவன்
ஆயிர நாமமே. 3
மூர்க்கப் பாம்பு
பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக்
கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப்
பற்றும் பழனத்தான்
தார்க்கொண் மாலை
சடைக்கரந் திட்டதே. 4
நீல முண்ட
மிடற்றினன் நேர்ந்ததோர்
கோல முண்ட
குணத்தால் நிறைந்ததோர்
பாலு முண்டு
பழனன்பா லென்னிடை
மாலு முண்டிறை
யென்றன் மனத்துளே. 5
மந்த மாக
வளர்பிறை சூடியோர்
சந்த மாகத்
திருச்சடை சாத்துவான்
பந்த மாயின
தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய்தந்தை
எம்பெரு மானுமே. 6
மார்க்க மொன்றறி
யார்மதி யில்லிகள்
பூக்க ரத்திற்
புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று
பரவும் பழனத்தான்
தாட்கண் நின்று
தலைவணங் கார்களே. 7
ஏறி னாரிமை
யோர்கள் பணிகண்டு
தேறு வாரலர்
தீவினை யாளர்கள்
பாறி னார்பணி
வேண்டும் பழனத்தான்
கூறி னானுமை
யாளொடுங் கூடவே. 8
சுற்று வார்தொழு
வார்சுடர் வண்ணன்மேல்
தெற்றி னார்திரி
யும்புர மூன்றெய்தான்
பற்றி னார்வினை
தீர்க்கும் பழனனை
எற்றி னான்மறக்
கேனெம் பிரானையே. 9
பொங்கு மாகடல்
சூழ்இலங் கைக்கிறை
அங்க மான
இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும்
பழனன் உமையொடுந்
தங்கன் றாளடி
யேனுடை யுச்சியே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்