ஆரிடம் பாடிலர் பாடல் வரிகள் (aritam patilar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பைஞ்ஞீலி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பைஞ்ஞீலி
சுவாமி : நீலகண்டேசுவரர்
அம்பாள் : விசாலாட்சியம்மை

ஆரிடம் பாடிலர்

ஆரிடம் பாடிலர்
அடிகள் காடலால்
ஓரிடங் குறைவிலர்
உடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை
யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும்
பயில்பைஞ் ஞீலியே. 1

மருவிலார் திரிபுரம்
எரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ்
ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை
உளங்கொ ளாதவத்
திருவிலார் அவர்களைத்
தெருட்ட லாகுமே. 2

அஞ்சுரும் பணிமலர்
அமுதம் மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ்
ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை
வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி
போர்த்த கொள்கையே. 3

கோடல்கள் புறவணி
கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல்
பயில்பைஞ் ஞீலியார்
பேடலர் ஆணலர்
பெண்ணும் அல்லதோர்
ஆடலை யுகந்தஎம்
அடிகள் அல்லரே. 4

விழியிலா நகுதலை
விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற்
சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ்
ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக்
கெடுக்க லாகுமே. 5

விடையுடைக் கொடிவல
னேந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ்
ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு
லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த
சதுரன் அல்லனே. 6

தூயவன் தூயவெண்
ணீறு மேனிமேற்
பாயவன் பாயபைஞ்
ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை
தோளி பாகமா
ஏயவன் எனைச்செயுந்
தன்மை யென்கொலோ. 7

தொத்தின தோள்முடி
யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ்
ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய்
தாளோர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி
பொருந்தி வாழ்மினே. 8

நீருடைப் போதுறை
வானும் மாலுமாய்ச்
சீருடைக் கழலடி
சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ்
ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந்
தலைவர் தன்மையே. 9

பீலியார் பெருமையும்
பிடகர் நூன்மையுஞ்
சாலியா தவர்களைச்
சாதி யாததோர்
கோலியா வருவரை
கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி
நினைந்து வாழ்மினே. 10

கண்புனல் விளைவயற்
காழிக் கற்பகம்
நண்புணர் அருமறை
ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ்
ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி
லோங்கி வாழ்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment