அரவச் சடைமேல் பாடல் வரிகள் (aravac cataimel) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பனையூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பனையூர்
சுவாமி : சௌந்தரேஸ்வரர்
அம்பாள் : பிரஹந்நாயகி
அரவச் சடைமேல்
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. 1
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே. 2
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே. 3
இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே. 4
அறையார் கழல்மேல் அரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே. 5
அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே. 6
அடையா தவர்மூ எயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
உடையான் அவனெண்1 பலபூதப்
படையா னவனூர் பனையூரே.
பாடம் : 1 அவனொண் 7
இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தஎம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே. 8
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே. 9
அழிவல் அமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே. 10
பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே.
திருச்சிற்றம்பலம்