ஆண்டானை அடியேனை பாடல் வரிகள் (antanai atiyenai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புள்ளிருக்குவேளூர் – வைத்தீசுவரன்கோவில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புள்ளிருக்குவேளூர் – வைத்தீசுவரன்கோவில்ஆண்டானை அடியேனை

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 1

சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப்
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 2

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 3

இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி
இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 4

மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 5

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6

நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா
இறையவனை எனையாளுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 7

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 8

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 9

இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment