அந்த ணாளன்உன் பாடல் வரிகள் (anta nalanun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புன்கூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புன்கூர்அந்த ணாளன்உன்

அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 1

வைய கமுற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 2

ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்ததண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 3

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 4

கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை உண்டு
கண்டத் தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 5

இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை
அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 6

போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 7

மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை
ஒருவ நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழக் கஅருள் செய்த
தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 8

அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம்
அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே. 9

கம்ப மால்களிற் றின்னுரி யானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்
செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்
செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்
தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை இலரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment