அன்ன மென்னடை பாடல் வரிகள் (anna mennatai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சிரபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருச்சிரபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

அன்ன மென்னடை

அன்ன மென்னடை அரிவையொடினிதுறை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக்
கம்மலர் வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர்
பருமதிற் சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும்
அடியவர் வினையொடும் பொருந்தாரே. 1

கோல மாகரி உரித்தவர்
அரவொடும் ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது
சூடிய சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின்
பளிப்பவர் பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார்
சிரபுரந் தொழவினை நில்லாவே. 2

மானத் திண்புய வரிசிலைப்
பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா
யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள்
திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக்
கொடுவினை குற்றங்கள் குறுகாவே. 3

மாணி தன்னுயிர் மதித்துண
வந்தஅக் காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர்
பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர்
வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும்
அடியவர்க் கருவினை யடையாவே. 4

பாரும் நீரொடு பல்கதிர்
இரவியும் பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல்
வேள்வியில் தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு
வந்திழி செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர
புரந்தொழும் அடியவர் வருந்தாரே. 5

ஊழி யந்தத்தில் ஒலிகடல்
ஓட்டந்திவ் வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள்
சரண்புக அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ
டினிதுறை இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந்
தொழுதெழ வல்வினை அடையாவே. 6

பேய்கள் பாடப்பல் பூதங்கள்
துதிசெய பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட
மாநடம் ஆடும்வித் தகனார்ஒண்
சாய்கள் தான்மிக வுடையதண்
மறையவர் தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க்
குந்தமைத் தொழுமவர் தளராரே. 7

இலங்கு பூண்வரை மார்புடை
இராவணன் எழில்கொள் வெற்பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங்
கழலடி நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த்
தென்றல்மன் றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர
புரந்தொழு தெழவினை குறுகாவே. 8

வண்டு சென்றணை மலர்மிசை
நான்முகன் மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ
டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே
நீண்டஎம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந்
தொழுதெழ வினையவை கூடாவே. 9

பறித்த புன்தலைக் குண்டிகைச்
சமணரும் பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந்
தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின்
றாவியின் மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந்
தொழவினை விட்டிடும் மிகத்தானே. 10

பரசு பாணியைப் பத்தர்கள்
அத்தனைப் பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை
நிமலனை நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத்
தண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ்
வல்லவர் பரமனைப் பணிவாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment