அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி பாடல் வரிகள் (ankamotiyor araimerrali) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புறம்பயம் – திருப்புரம்பியம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புறம்பயம் – திருப்புரம்பியம்அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி

அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி
நின்றும்போந்துவந் தின்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர்
ஈசனாரெழு நெஞ்சமே
கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள்
ஏத்திவானவர் தாந்தொழும்
பொங்குமால்விடை யேறிசெல்வப்
புறம்பயந்தொழப் போதுமே. 1

பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும்
பண்டையாரலர் பெண்டிரும்
நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும்
நினைப்பொழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கையானிடம்
மகிழும்மல்லிகை செண்பகம்
புதியபூமலர்ந் தெல்லிநாறும்
புறம்பயந்தொழப் போதுமே. 2

புறந்திரைந்து நரம்பெழுந்து
நரைத்துநீயுரை யாற்றளர்ந்
தறம்புரிந்து நினைப்பதாண்மை
அரிதுகாண்இஃ தறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமேசிறு
காலைநாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன்
புறம்பயந்தொழப் போதுமே. 3

குற்றொருவரைக் கூறைகொண்டு
கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்
செற்றொருவரைச் செய்ததீமைகள்
இம்மையேவருந் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன்மற
வாதெழுமட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி
புறம்பயந்தொழப் போதுமே. 4

கள்ளிநீசெய்த தீமையுள்ளன
பாவமும்பறை யும்படி
தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண்
சேவுடைச்சிவ லோகனூர்
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல்
தோன்றுதாமரைப் பூக்கள்மேல்
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும்
புறம்பயந்தொழப் போதுமே. 5

படையெலாம்பக டாரஆளிலும்
பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்
கடையெலாம்பிணைத் தேரைவால்கவ
லாதெழுமட நெஞ்சமே
மடையெலாங்கழு நீர்மலர்ந்து
மருங்கெலாங்கரும் பாடத்தேன்
புடையெலாம்மணம் நாறுசோலைப்
புறம்பயந்தொழப் போதுமே. 6

முன்னைச்செய்வினை இம்மையில்வந்து
மூடுமாதலின் முன்னமே
என்னைநீதியக் காதெழுமட
நெஞ்சமேயெந்தை தந்தையூர்
அன்னச்சேவலோ டூடிப்பேடைகள்
கூடிச்சேரு மணிபொழிற்
புன்னைக்கன்னி கழிக்கணாறும்
புறம்பயந்தொழப் போதுமே. 7

மலமெலாமறும் இம்மையேமறு
மைக்கும்வல்வினை சார்கிலா
சலமெலாமொழி நெஞ்சமேயெங்கள்
சங்கரன்வந்து தங்குமூர்
கலமெலாங்கடல் மண்டுகாவிரி
நங்கையாடிய கங்கைநீர்
புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும்
புறம்பயந்தொழப் போதுமே. 8

பண்டரியன செய்ததீமையும்
பாவமும்பறை யும்படி
கண்டரியன கேட்டியேற்கவ
லாதெழுமட நெஞ்சமே
தொண்டரியன பாடித்துள்ளிநின்
றாடிவானவர்தாந் தொழும்
புண்டரீக மலரும்பொய்கைப்
புறம்பயந்தொழப் போதுமே. 9

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந்
துயக்கறாத மயக்கிவை
அஞ்சிஊரன் திருப்புறம்பயத்
தப்பனைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயந்தொழு
துய்துமென்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்யவல்லவர்
வல்லவானுல காள்வரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment