ஆமயந்தீர்த் தடியேனை பாடல் வரிகள் (amayantirt tatiyenai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தனி – திருத்தாண்டகம் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : தனி – திருத்தாண்டகம்ஆமயந்தீர்த் தடியேனை

ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார்
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. 1

முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார்
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்
அடியேனை ஆளுடைய அடிக ளாரே. 2

முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே. 3

பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்
கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. 4

அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்
மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே. 5

பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்
பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகி
வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க ஒற்றிநகர் பற்றிக் கொண்டார்
உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 6

அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே. 7

படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்
பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே
என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே. 8

எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து
உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே. 9

சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 10

குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்
தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்
இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 11

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment