Thiruppavai Song lyrics and meaning in tamil | Thiruppavai Pasuram and Vilakkam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருப்பாவை பாடல்களும் விளக்கமும் : 30 பாசுரங்களும் பொருளும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 1 Meaning & Vilakkam

விளக்கம்:

மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.

============

திருப்பாவை – 2 | Thiruppavai Pasuram 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 2 Meaning & Vilakkam

பொருள்:

திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்
:

ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

============

திருப்பாவை – 3 | Thiruppavai Pasuram 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 3 Meaning & Vilakkam

பொருள்:

சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

விளக்கம்:

திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

============

திருப்பாவை – 4 | Thiruppavai Pasuram 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

.

Thiruppavai Pasuram 4 Meaning & Vilakkam

பொருள்:

மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்:

ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, “ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் “கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே “பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக “கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

============

திருப்பாவை – 5 | Thiruppavai Pasuram 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

Thiruppavai Pasuram 5 Meaning & Vilakkam

பொருள்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்:

“உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. “ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

============

திருப்பாவை – 6 | Thiruppavai Pasuram 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

Thiruppavai Pasuram 6 Meaning & Vilakkam

பொருள்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் “ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

விளக்கம்:

பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.

============

திருப்பாவை – 7 | Thiruppavai Pasuram 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 7 Meaning & Vilakkam

பொருள்:

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

விளக்கம்:

பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் “கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. “கேசவன் என்ற சொல்லுக்கே “தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள். வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.

============

திருப்பாவை – 8 | Thiruppavai Pasuram 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 8 Meaning & Vilakkam

பொருள்:

மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் “ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

விளக்கம்:

திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.

============

திருப்பாவை – 9 | Thiruppavai Pasuram 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 9 Meaning & Vilakkam

பொருள்:

பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

விளக்கம்:

உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

============

திருப்பாவை – 10 | Thiruppavai Pasuram 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 10 Meaning & Vilakkam

பொருள்:

முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

விளக்கம்:

யாராவது நன்றாகத் தூங்கினால் “சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன “ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.

============

திருப்பாவை – 11 | Thiruppavai Pasuram 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 11 Meaning & Vilakkam

பொருள்:

கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

விளக்கம்:

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.

============

திருப்பாவை – 12 | Thiruppavai Pasuram 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 12 Meaning & Vilakkam

பொருள்:

பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

விளக்கம்:

எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

============

திருப்பாவை – 13 | Thiruppavai Pasuram 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே

பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 13 Meaning & Vilakkam

பொருள்:

பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்:

“கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

============

திருப்பாவை – 14 | Thiruppavai Pasuram 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 14 Meaning & Vilakkam

பொருள்:

எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்:

கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

============

திருப்பாவை – 15 | Thiruppavai Pasuram 15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்

வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

Thiruppavai Pasuram 15 Meaning & Vilakkam

பொருள்:

“”ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, “”கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், “”உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், “”சரி..சரி…எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.””அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “”என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், “”நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

விளக்கம்:

ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

============

திருப்பாவை – 16 | Thiruppavai Pasuram 16

நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய

கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;

ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 16 Meaning & Vilakkam

பொருள்
: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

விளக்கம்:
ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.

============

திருப்பாவை – 17 | Thiruppavai Pasuram 17

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 17 Meaning & Vilakkam

பொருள்:
ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

விளக்கம்:
திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

============

திருப்பாவை – 18 | Thiruppavai Pasuram 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 18 Meaning & Vilakkam

பொருள்:
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

விளக்கம்:
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

============

திருப்பாவை – 19 | Thiruppavai Pasuram 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 19 Meaning & Vilakkam

பொருள்:
குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

விளக்கம்:
பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

============

திருப்பாவை – 20 | Thiruppavai Pasuram 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 20 Meaning & Vilakkam

பொருள்:
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

விளக்கம்:
கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!

============

திருப்பாவை – 21 | Thiruppavai Pasuram 21

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 21 Meaning & Vilakkam

விளக்கம்:
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

விளக்கம்:
மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்… ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.

============

திருப்பாவை – 22 | Thiruppavai Pasuram 22

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 22 Meaning & Vilakkam

பொருள்:
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

விளக்கம்:
இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை… அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.

============

திருப்பாவை – 23 | Thiruppavai Pasuram 23

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,

வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,

போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்

கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 23 Meaning & Vilakkam

பொருள்:
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்:
எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு…என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

============

திருப்பாவை – 24| Thiruppavai Pasuram 24

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,

கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,

குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,

என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 24 Meaning & Vilakkam

பொருள்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்:
இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

============

திருப்பாவை – 25 | Thiruppavai Pasuram 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 25 Meaning & Vilakkam

பொருள்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்:
பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

============

திருப்பாவை – 26 | Thiruppavai Pasuram 26

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன

பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 26 Meaning & Vilakkam

பொருள்:
பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

விளக்கம்:
பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குரு÷க்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.

============

திருப்பாவை – 27 | Thiruppavai Pasuram 27

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாக,

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 27 Meaning & Vilakkam

பொருள்:
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்:
கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.

============

திருப்பாவை – 28 | Thiruppavai Pasuram 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்

பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,

இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 28 Meaning & Vilakkam

பொருள்:
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

விளக்கம்:
குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப் பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

============

திருப்பாவை – 29 | Thiruppavai Pasuram 29

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

Thiruppavai Pasuram 29 Meaning & Vilakkam

பொருள்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

============

திருப்பாவை – 30 | Thiruppavai Pasuram 30

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

Thiruppavai Song 30 Meaning & Vilakkam

பொருள்:
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

இந்த | thirupavai pasurams lyrics meaning vilakkam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது திருப்பாவை, Thiruppavai lyrics in tamil, Trending திருப்பாவை பாடல்களும் விளக்கமும் : 30 பாசுரங்களும் பொருளும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment