Kandha Guru Kavasam lyrics in tamil
கந்த குரு கவசம் பாடல் வரிகள் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கந்த குரு கவசம் | Kandha Guru Kavasam காணொளி இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளது…
தமிழ் கடவுளான முருகனைப் போற்றி வழிபடக்கூடிய கந்தர் கவசங்களுள் கந்த குரு கவசமும் ஒன்று. தந்தைக்கு குருவாகி மந்திரம் தந்தருளிய ஸ்கந்தக் (Skandha) கடவுள் முருகனை ‘ஸ்கந்த குரு கவசம்’ பாடி நாமும் கந்தனின் அருள் பெறுவோம்.
“ஸ்கந்த குரு கவசம்”, ஸ்ரீ சந்தானந்த ஸ்வாமிகளின் கந்தர் சஷ்டி கவசம் போன்ற முருகப்பெருமானைப் போற்றும் மற்றொரு பிரபலமான தமிழ்ப் பாடல் – நமது குருவின் வடிவில். ஸ்ரீ சந்தானந்த ஸ்வாமிகள் ஒரு சிறந்த துறவி மற்றும் ஸ்கந்த பகவானின் பக்தர் ஆவார், அவர் இந்தியாவின் சேலத்தில் ஸ்கந்தாஸ்ரமத்தை நிறுவியுள்ளார்.
விநாயகர் வாழ்த்து
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் 5
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.
செய்யுள்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் 10
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் 15
அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ 20
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் 25
தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே 30
ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே 35
தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் 40
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை 45
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா 50
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் 55
குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா 60
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் 65
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் 70
ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் 75
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் 80
அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ 85
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் 90
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா 95
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ 100
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா 105
காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் 110
உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா 115
அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு 120
அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் 125
அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் 130
சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் 135
சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் 140
மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் 145
என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் 150
செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் 155
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் 160
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே 165
உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் 170
முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.
மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.
முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்!
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி 175
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா 180
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் 185
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் 190
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே 195
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் 200
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா 205
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் 210
பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே 215
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் 220
சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் 225
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே 230
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே 235
திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் 240
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் 245
துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா 250
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே 255
அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ 260
ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் 265
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் 270
அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் 275
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் 280
ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு 285
எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் 290
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா 295
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா 300
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் 305
புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் 310
ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் 315
கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே 320
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா 325
சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை 330
கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா 335
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் 340
உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக 345
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் 350
அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் 355
முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ 360
சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு 365
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ 370
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா 375
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் 380
கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் 385
வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் 390
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் 395
பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் 400
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் 405
இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் 410
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் 415
உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே 420
கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் 425
ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று 430
ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே 435
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் 440
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் 445
கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். 447
ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.
Kandha Guru Kavasam Video Song
கந்த குரு கவசத்தின் பயன் மற்றும் பலன் | Kandha Guru kavasam need and benefits
ஒருவரது வாழ்வில் உள்ள அறியாமை என்னும் இருளை அகற்றி, உலக வாழ்வின் துன்பங்களில் இருந்து ஒருவரை விடுவிக்கும் ஞான ஒளியை நோக்கி அவரை அழைத்துச் செல்லும் ஆன்மீக ஆசிரியர் குரு.
சைவ சித்தாந்தத்தில், குருவின் முக்கியத்துவமே முதன்மையானது, ஏனெனில், ஒரு குருவின் அருளும் வழிகாட்டுதலும் இல்லாமல் ஒருவர் இறைவனை அடைய முடியாது – ஒரு சுற்றுலா வழிகாட்டியின் உதவியின்றி வெளிநாட்டில் ஒரு இலக்கை அடைய முடியாது. இந்த விஷயத்தில் இலக்கு கடவுள், அந்நிய நாடு அதன் கர்ம பந்தங்களால் நிரப்பப்பட்ட நமது பூமிக்குரிய வாழ்க்கை, மற்றும் பயண வழிகாட்டி குரு – அவர் அடைய பாடுபடும்போது பக்தன் சந்திக்கும் அனைத்து இடர்பாடுகள், இடர்பாடுகள், வழிதடுப்புகள் போன்ற அனைத்தையும் அறிந்தவர். அவரது இலக்கு (கடவுள்).
இந்து மதத்தில், குருவை வழிபடுவது கடவுளின் வழிபாடு என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது – ஏனெனில் குரு கடவுளுடன் ஒன்றாகும். குரு என்பது உண்மையான குருவின் (கடவுளின்) வெளிப்புற வெளிப்பாடு – அவர் அனைத்து ஆத்மாக்களிலும் வசிக்கிறார்.
பெரிய சீனக் கவிஞர் கன்ஃப்யூசியஸ் ஒருமுறை கூறினார், “மாணவர் தயாராக இருக்கும்போது, ஆசிரியர் தோன்றுகிறார்.” அதுபோல, பக்தன் தயாராக இருக்கும்போதுதான் குரு தோன்றுவார். பக்தனின் ஆன்மாவின் ஆன்மீக முதிர்ச்சியை உணர்ந்து, உண்மையைத் தேடுபவருக்கு சுய-உணர்தலைப் பெற உதவுவதற்காக ஒரு குருவை (துறவி) அனுப்புவது உண்மையில் கடவுள்தான். இது நிகழும் அடிப்படை அடித்தளம் பக்தி (பக்தி) ஆகும்.
ஸ்கந்த குரு கவசம் என்பது பக்தி நிரம்பிய ஒரு பாடலாகும், இது நமக்குள் இருக்கும் உண்மையான குருவை (கடவுள்) முருகப்பெருமானின் வடிவில் அழைக்கிறது மற்றும் நமது உண்மையான இயல்பை அடைய உதவும் பகவானின் அருளைப் பெறுங்கள். குரு இல்லாதவர்களுக்கு ஸ்ரீ ஸ்கந்தன் குருவாகிறார். குரு உள்ளவர்களுக்கு, குரு மற்றும் கடவுளின் ஒருமையை உணர ஸ்ரீ ஸ்கந்தம் உதவுகிறது.
பகவான் ஸ்ரீ ஸ்கந்தாவின் அருள் உங்கள் அனைவருக்கும் எப்போதும் இருக்கட்டும்.
இந்த | kandha guru kavasam lyrics in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Murugan songs, முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கந்தர் கவசங்கள், Kandhar Kavasam கந்த குரு கவசம் | Kandha Guru Kavasam போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…